கோலாலம்பூர், நவம்பர்.28-
பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டாருக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டைத் தாம் லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறியிருக்கும் வர்த்தகர் ஆல்பெர்ட் தே-யை இன்று காலையில் அவரின் வீட்டில் கைது செய்யும் நடவடிக்கையில் அவரின் தலையில் 6 துப்பாக்கிகள் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி வன்மையாக மறுத்தார்.
பூச்சோங்கில் உள்ள ஆல்பெர்ட் தே-யின் வீட்டில் நடந்த கைது நடவடிக்கையில் எஸ்ஓபி எனும் சீரான செயலாக்க நடைமுறையைப் பின்பற்றியே எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்தனர் என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.
எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்கு எதிராக ஆல்பெர்ட் தே கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் ஆல்பெர்ட் தே, சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கியச் சாட்சியாகத் திகழ்கிறார். அதன் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளது. இது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் எஸ்பிஆர்எம்மிற்குக் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கு தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஸாம் பாக்கி நினைவுறுத்தினார்.








