Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி
தற்போதைய செய்திகள்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

Share:

பேராக் மாநிலத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆலய நிலப் பிரச்சினைகளில் 40 விழுக்காடு வரை மாநில அரசு வெற்றிகரமாகத் தீர்வு கண்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் நிலப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்படும் வரை பேராக் மாநிலத்தில் எந்தவொரு ஆலயமும் உடைக்கப்பட மாட்டாது என மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈப்போ சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து ஆலயங்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கும் நிகழ்வுக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ சிவநேசன் இதனை குறிப்பிட்டார்.

நில உரிமை, மாற்று இடம் போன்ற சிக்கல்களுக்கு மனிதநேய அடிப்படையில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுவரை தீர்க்கப்பட்ட ஆலயங்களுக்குச் சட்டப்பூர்வ நில உரிமை அல்லது பாதுகாப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 விழுக்காடு பிரச்சினைகளையும் படிப்படியாகத் தீர்க்க மாவட்ட நில அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களுடன் மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று டத்தோ சிவநேசன் விளக்கினார்.

தற்போது பிரச்சினை உள்ள 55 ஆலயங்களில், சிலவற்றுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டும் அங்கு செல்ல மறுக்கும் நிர்வாகங்களின் பிடிவாதமான செயல்களுக்கு மாநில அரசு பொறுப்பேற்காது என்பதையும் டத்தோ சிவநேசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனிடையே இந்நிகழ்வில் மானியம் பெற்ற ஈப்போ, தம்புன், தேவி ஓம் ஸ்ரீ சிவசக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி தேவஸ்தானத்தின் செயலாளர் கதிரவன் நாகையா, ஆலயம் சார்பில் தமது மனமார்ந்த நன்றியை டத்தோ சிவநேசனிடம் தெரிவித்துக்கொண்டர்.

ஈப்போ, புந்தோங் குங்குமாங்கி கோயில் எனப்படும் ஓம் ஸ்ரீ வீரமுத்து மகாகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்திற்கு டத்தோ சிவநேசன் 80 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கியிருப்பதாக ஆலயத் தலைவர் எஸ். லெட்சுமணன் தெரிவித்தார்.

ஈப்போ, பாடாங் தேம்பாக், தேவி ஸ்ரீ சங்கு நாத காளியமம்மன் ஆலயத்திற்கு 25 ஆயிரம் வழங்கியிருப்பதாக அதன் தலைவர் கார்த்திக் ராயப்பன் குறிப்பிட்டார்.

மாநில அரசின் இந்த நிதியுதவிக்கும், பிரச்சினைகளைத் தீர்க்கும் சிறப்பான நடவடிக்கைகளுக்கும் நிதி உதவிப் பெற்ற இதர ஆலய நிர்வாகத்தினரும் தங்களது நன்றியை பதிவு செய்தனர்.

Related News