Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஈப்போ மீண்டும் அதிர்ந்ததா? மர்ம பூகம்பம், குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈப்போ மீண்டும் அதிர்ந்ததா? மர்ம பூகம்பம்,  குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி

ஈப்போ, ஜூன்.18-

ஈப்போவில் இன்று காலையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மர்ம பூகம்பம், அந்த மாநகரை அதிரச் செய்ததாக குடியிருப்பாளர்கள் பலர் தெரிவித்தனர்.

ஈப்போ அதிர்ந்ததை, அப்பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது சாதாரண அதிர்வு அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர்.

மக்கள் அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணைச் செய்யத் தொடங்கியுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் தெரிவித்தார்.

உண்மையிலேயே இந்த மர்ம பூகம்பம் நடந்து இருப்பது, ஏதேனும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இருக்குமானால், அது தொடர்பாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின், ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ, கிளேபாங் ஹார்மோனியைச் சேர்ந்த 36 வயது முகமட் டேனியல் நோர்டின் கூறுகையில், பயங்கர வெடிச் சத்தம் போன்ற பெரிய அதிர்வு ஏற்பட்ட போது தாம் வீட்டில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

யாரோ கதவை மிகவும் பலம் கொண்டு தட்டுவது போலவும், அதிர்வு ஏற்பட்டதைப் போலவும் உணர முடிந்ததாகத் தெரிவித்தார்.

பெரும் சத்தமாக இருந்ததால் அந்தச் சத்தத்தின் அதிர்வில் வீட்டுப் பொருட்கள் குலுங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி இந்த அதிர்வு, இன்று காலை 10.30 மணியளவில் கிளேபாங், பெர்சாம், மேரு ராயா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அப்பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்ததாக அவர்கள் கருத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, ஈப்போவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் ஒரு பெரிய இடி மற்றும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த அதிர்வு, காலை 11.06 மணிக்கு சுங்கை சிப்புட் துணை மாவட்டம் வரை உணர முடிந்தது.

இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள இந்த அதிர்வு மர்மமாகவும் கேள்விக் குறியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஈப்போ மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்வுகள், குவாரி கல்லுடைப்பு வெடிப்புப் பணிகளுடன் தொடர்புடையவை அல்ல என்று பேராக் கனிம வள மற்றும் புவியியல் துறை இயக்குனர் நிஸாருலிக்ராம் அப்துல் ரஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

அதே வேளையில் அந்த அந்த நேரத்தில் குவாரி கல்லுடைப்புப் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →