கோலாலம்பூர், ஜூலை.18-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைப் பதவி இறங்கச் சொல்லி, வரும் ஜுலை 26 ஆம் தேதி கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தூருன் அன்வார் பேரணியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜான் உசுஃப் முகமட் தெரிவித்தார்.
இந்தப் பேரணி நடைபெறுவதற்கு நான்கு இடங்களிலிருந்து ஊர்வலம் தொடங்கும் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரின் மையப் பகுதியான சோகோ, மஸ்ஜிட் ஜாமெக், மஸ்ஜிட் நெகாரா மற்றும் பசார் செனி ஆகியவையே அந்த நான்கு இடங்களாகும்.
அன்றைய தினம் காலை 11 மணிக்கு பங்கேற்பாளர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பிற்பகல் 2 மணியளவில் அவர்கள், டத்தாரான் மெர்டேக்காவை வந்து சேர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாக டத்தோ முகமட் ஜான் குறிப்பிட்டார்.
பொது அமைதியை உறுதிச் செய்வதற்கு எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்வதற்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் களத்தில் இறக்கப்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.








