2026 -ஆம் ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தின கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கும் வகையில், ஜாபென் (JAPEN) எனப்படும் மலேசிய தகவல் துறை ஏற்பாடு செய்த பெந்தாராமா மெர்டேக்கா@ஹோஹோ நிகழ்ச்சி கோலாலம்பூரில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது.

இரண்டடுக்கு பேருந்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று நிகழ்ச்சியில் டத்தாரான் மெர்டேக்கா, சுங்கை வாங் பிளாஸா மற்றும் பெவிலியன் புக்கிட் பிந்தாங் ஆகிய இடங்களில் 4,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஜாபென் தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அஹ்மாட் மற்றும் தொடர்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் முஹமட் நஜ்மி முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எர்வின் கைருல் அஹ்மாட், இந்நிகழ்ச்சியானது தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட உணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.
ஜாலூர் கெமிலாங் கொடியை தலைகீழாகப் பறக்கவிடுவது தொடர்பான சம்பவங்கள் குறித்தும் ஜாபென் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் தேசிய மாதக் கொண்டாட்டங்கள் முடிவடைவதில்லை என்றும், செப்டம்பர் 16-ஆம் தேதி வரை தேசிய மாதம் தொடரும் என்றும் எர்வின் கைருல் தெரிவித்தார்.
அன்றைய தினம் சரவாக் மாநிலம் கூச்சிங் போர்னியோ மாநாட்டு மையத்தில் நடைபெறும் மலேசிய தினக் கொண்டாட்டத்தில் 6,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் கூச்சிங் வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் வாணவேடிக்கை, மெர்டேக்கா பிளாஸா உள்ளிட்ட இடங்களில் மலேசியா உருவான வரலாறு மற்றும் தேசிய கீதமான நெகாராகூ தொடர்பான கண்காட்சிகளும், சரவாக் மாநிலத்தின் 10 இடங்கள், சபா மற்றும் தீபகற்ப மலேசியாவின் 4 இடங்களிலும் கண்காட்சிகளும் நடைபெற உள்ளதாகவும் எர்வின் கைருல் அறிவித்துள்ளார்.
இதனிடையே பெந்தாராமா கலாசாரக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் நேரடி இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன், பொதுமக்களுக்கு ஜாலூர் கெமிலாங் கொடிகளும் வழங்கப்பட்டன.








