கெடா, பாடாங் செராயில் குடியிருப்பு வசதிகளுடன் கூடிய சுகாதார நிலையம் அமைக்கும் 42 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டமானது இரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சரும் கெடா மாநில வளர்ச்சி குழு தலைவருமான டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதன் ஆரம்ப ஒப்பந்ததாரர் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு, பொதுப்பணித் துறையான ஜேகேஆர் மீண்டும் டெண்டர் கோரியுள்ளதுடன், தற்போது டெண்டர் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமும் சுமார் 800 முதல் 900 நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில், வெறும் 15 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுவதால், இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கம்போங் பாடாங் லெமாக்-ஆயர் பூத்தே-ஜுங்ஜோங்-கூலிம் சாலைத் திட்டம் 170 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படுகிறது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கூலிம் மற்றும் செபெராங் பிறை பகுதிகளுக்கான பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுமார் 60 நிலப்பகுதிகளை கையகப்படுத்துதல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக சைஃபுடின் தெரிவித்தார்.

அதேவேளையில் முடங்கிய திட்டங்களை விரைவுபடுத்தி, மக்கள் பயன்பெறும் வகையில் அவற்றை திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று கூலிம், பாடாங் செராய் மற்றும் கம்போங் பாடாங் லெம்பேக் ஆகிய இரு இடங்களைப் பார்வையிட்ட டத்தோ ஶ்ரீ சைஃபுடின் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.








