டான்ஸ்ரீ முகைதீன் யாசின், பெர்சத்து கட்சியின் தலைவர் பதவியை தொடர்ந்து தற்காப்பதிலிருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது கட்சியில் வலுத்து வரும் தலைமைத்துவப் போராட்டமே காரணமாகும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
பெர்சத்து கட்சியில் முகைதீனுக்கு பிறகு யார் தலைமைத்துவத்தை ஏற்பது என்ற பதவிப் போராட்டம், அக்கட்சியின் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டு, பல்வேறு அணிகளாக பிரியும் நிலையில் அத்தகைய நெருக்குதலை தாங்கிக் கொள்ள முடியாமல் முகைதீன் யாசின் இருப்பதாக NUSANTARA கல்விக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பெர்சத்து கட்சி தனது இலக்கையும், உற்சாகத்தையும் இழந்து விட்டது.
இந்நிலையில் பலவீனமாகி வரும் பெர்சத்து கட்சியில் முகைதீனுக்கு பிறகு யார் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பது என்பது தற்போது கட்சித் தவைர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருப்பதாக அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.








