கோலாலம்பூர், அக்டோபர்.17-
போதைப்பொருளை விநியோகிப்பதில் தங்களுக்கான இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் குண்டர் கும்பல் ஒன்றைச் சேர்ந்த பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
இந்த பத்து பேர் பிடிபட்டது மூலம் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
உள்ளூரைச் சேர்ந்த 29 வயது ஆடவர் ஒருவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி போலீசார் புகார் ஒன்றைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் போலீஸ் சிறப்பு விசாரணைக்குழுவான D9 பிரிவு ( டி நைன் ) சிலாங்கூர் சுற்று வட்டாரத்தில் மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் 21 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து நபர்களைக் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
அனைவரின் பின்னணியையும் ஆராய்ந்துப் பார்த்ததில் அவர்கள் பல்வேறு குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர். பிடிபட்ட நபர்களில் ஒருவரின் கோல சிலாங்கூரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி Stoeger Cougar ரகத்திலான தானியங்கி கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற கடுங் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் விநியோகிப்பில் இடங்களைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே வஞ்சம் தீர்க்கும் வகையில் ஒருவர் சுடப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இதன் தொடர்பில் 21 மற்றும் 34 வயதுடைய இரு நபர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களில் 34 வயதுடைய நபர் TR திட்டமிட்ட கிரிமில் கும்பலைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் முத்துவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.