தெற்கு நோக்கிய கோலாலம்பூர் - சிரம்பான் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கனவுந்து ஒன்று அளவுக்கு மீறிய டீசலை நிரப்பி கடத்தும் நடவடிக்கையை உள்நாட்டு வாணிபம் - வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஓப்ஸ் திரிஸ் சோதனை நடவடிக்கையில் முறியடிக்கப்பட்டது.
இவ்விவகாரம் குறித்து தகவல் தெரிவித்த அவ்வமைச்சின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைமை இயக்குநர் முஹம்மது ஜாஹிர் மஸ்லான் கூறுகயில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு மணி 11.10 மணியளவில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்புக் குழு அச்சோதனை நடவடிக்கை மேற்கொண்டு 45 வயது மலேசியரைக் கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்தக் கனவுந்தில் இருந்த 4 ஐபிசி கொள்கலன்களில் இரண்டு கொள்கலன்கள் டீசலால் நிரப்பப்பட்டிருந்தது அச்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
4 ஆயிரத்து 300 வெள்ளி மதிப்பிலான 2 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதோடு 15 ஆயிரத்து 700 வெள்ளி மதிப்பிலான டீசலைக் கடத்த பயன்படுத்தப்பட்ட கனவுந்து. பம்ப் இயந்திரம், ஐபிசி கொள்கலன்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் விதிமுறைகளை மீறி செயல்படுத்தப்படும் எந்தவிதமான நடவடிக்கைக்கும் நெகிர் செம்பிலான் உள்நாட்டு வாணிபம் - வாழ்க்கைச் செலவின அமைச்சு இடம் கொடுக்காது என அவர் மேலும் சொன்னார்.








