புத்ராஜெயா, செப்டம்பர்.26-
இஸ்ரேல் உட்பட 20 நாடுகளில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுகள், கடந்த 1999-ஆம் ஆண்டே விசாரிக்கப்பட்டு பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டன என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
அன்வாருக்கு எதிராக ஊழல் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்கான எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை என்று அப்போதைய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளதையும் எஸ்பிஆர்எம் மேற்கோள் காட்டியுள்ளது.
அண்மையில் டிக் டாக்கில் பகிரப்பட்டு வரும், அன்வாருக்கு எதிரான காணொளி ஒன்றுக்கு பதிலளித்துள்ள எஸ்பிஆர்எம், இவ்வழக்கை விசாரணை செய்த முன்னாள் புலனாய்வு இயக்குநர் டத்தோ அப்துல் ரசாக் இட்ரிஸ் தனது விசாரணையின் உண்மைத்தன்மை குறித்து சத்திய பிரமாணம் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதோ அல்லது ஒரு தனிநபரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காணொளி வெளியிடுவதோ வேண்டாம் என்றும் எஸ்பிஆர்எம் அனைத்துத் தரப்பினருக்கும் நினைவூட்டியுள்ளது.
அவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புவது குழப்பத்தை ஏற்படுத்தி பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரித்துள்ளது.








