பத்து பஹாட், ஜூன்.07-
யோங் பெங் பகுதியில் உள்ள மசீச கட்சி அலுவலகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் சுமார் 80 விழுக்காடு சேதமடைந்ததுடன், வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான கட்சியின் தயாரிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் லிங் தியான் சூன் கூறுகையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் கட்சியின் நடவடிக்கைகளை தற்காலிக இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் மசீச-வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மாநிலத் தேர்தலுக்கான பணிகளைத் தொடர தற்காலிக அலுவலகம் ஒன்றைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு யோங் பெங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த லிங், தீ விபத்தில் ஒலிபெருக்கி அமைப்பு, குளிர்சாதன வசதிகள், அலுவலகத் தளவாடங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு மற்றும் காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








