1எம்.டி.பி ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவான நிதியாளர் லோ தேக் ஜோ, அமெரிக்காவில் மன்னிப்பு கோரியிருப்பது குறித்து மலேசியா தனது கண்டனத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தியுள்ளார்.
உலக வரலாற்றில் மிகப் பெரிய மோசடி வழக்காகக் கருதப்படும் 1எம்.டி.பி வழக்கில், மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோ லோ அமெரிக்காவில் தஞ்சமடைந்து, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பொது மன்னிப்பு பெற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுப்பது அமெரிக்காவின் பொறுப்பு என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கருத்துடன் தாம் ஒத்துப் போவதாகவும் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், 1எம்.டி.பி ஊழலில் தொடர்புடைய அனைவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மலேசியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் ஜோ லோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க, அவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் தாம் முன்வைக்கவுள்ளதாகவும் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், 1எம்.டி.பி ஊழல் காரணமாக மலேசியா மிகப்பெரிய மற்றும் பல தலைமுறைகள் பாதிக்கப்படும் அளவிலான இழப்புகளை சந்தித்துள்ளது.
இந்த குற்றத்தின் மூளையாக செயல்பட்டவர்களும், அதற்கு துணைநின்றவர்களும் நீதியை தவிர்த்து சுதந்திரமாக தப்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது, அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கோபிந்த் சிங் டியோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.








