வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல், மலேசியாவில் சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களின் வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டை அல்லது கடப்பிதழ் போன்ற அரசாங்க ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில், ‘ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் 2025’-இன் கீழ் இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாகத் தொடர்புதுறை துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.
வெறும் சுயவிவரப் பிரகடனம் மூலம் எவரும் தங்களின் வயதை ஏமாற்ற முடியும் என்பதால் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய கணக்குகளைச் சரிபார்ப்பதற்குச் சமூக ஊடக நிறுவனங்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னரே அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தியோ நி சிங் இன்று கூறினார்.








