அடுத்த மாதம் இந்துக்கள் கொண்டாடவிருக்கும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு மலேசிய மடானி கோட்பாட்டின் கீழ் அரசாங்க சார்ந்த தீபாவளி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலை கலை, கலாச்சாரம் இலாகா கலந்தாலோசித்து வருவதாக அதன் முகமட் அம்ரன் முகமட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இனத்தவரின் முதன்மையான பண்டிக்கைகளின் அரசாங்க நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெற்று அந்நிகழ்வுக்கு மெருகூட்டப்பட வேண்டும். .ஆனால் எவ்வாறு அக்கொண்டாட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதற்கு இத்தகைய கலந்துரையாடல் அவசியமாகிறது என்று முகமட் அம்ரன் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் சுங்கைப்பட்டாணி காந்தி மண்டபத்தில் சிவாஜி கலை கலாச்சார மன்றத்தின் தலைவர் டாக்டர் லட்சபிரபு ஏற்பாட்டில் மலேசிய கலை, கலாச்சார இலாகாவின் ஆதரவோடு கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான மலேசிய மக்களின் பாரம்பரிய நடன போட்டியின் இறுதிச் சுற்றுக்கு சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட முகமட் அம்ரான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் .
கடாரத்தில் முதன் முறையாக தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மலேசியாவின் பாரம்பரிய நடன போட்டியில் கலந்து கொண்ட 10 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் மிகவும் சிறப்பான அமைந்ததாக முகமட் அம்ரன் புகழாரம் சூட்டினார்.
பல்லினத்தவர்களின் இதுபோன்ற கலை, கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தங்களின இலாகா முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்வி வரும் என்று முகமட் அம்ரன் குறிப்பிட்டார்.
மலேசிய மக்களின் பாரம்பரிய நடனப் போட்டி இறுதி சுற்றில் சுங்கைப்பட்டாணி தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை வென்று 3 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை தட்டிச் சென்றனர் .
இரண்டாவது இடத்தை வென்ற செர்டாங் கணேசர் தமிழ்பள்ளிக்கு 2 ஆயிரம் வெள்ளியும், மூன்றாவது இடத்தை வென்ற ஆறுமுகம் தமிழ்ப்பள்ளிக்கு ஆயிரம் வெள்ளியும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டதாக சிவாஜி கலை கலாச்சார மன்றத்தின் செயலாளர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார் .
இந்நிகழ்விற்கு சிறப்பு பிரமுகராக கெடா மாநில கலை, கலாச்சார இலாகாவின் தலைமை அதிகாரி சபரினா பிந்தி மசாத், சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் தௌபிக் ஜோஹாரி உட்பட அழைக்கப்பட்ட பிரமுகர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கலந்து சிறப்பித்தனர்.








