பேராக் மாநில இந்து சங்கத்தின் 48ஆவது ஆண்டு திருமுறை ஓதும் விழா, ஈப்போ மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் பேராக் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 899 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 4,606 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அதில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு ஈப்போ வட்டார இந்து சங்கம் முதலிடத்தையும், தைப்பிங் இரண்டாம் இடத்தையும், தெலுக் இந்தான் மூன்றாம் இடத்தையும், மஞ்சோங் நான்காம் இடத்தையும், சுங்கை சிப்புட் ஐந்தாம் இடத்தையும் பெற்றன.

போட்டியை பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தொடக்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் தங்க. கணேசன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய டத்தோ சிவநேசன், இளம் தலைமுறையினரிடையே ஆன்மிக உணர்வு, சமயப் பண்பாடு மற்றும் இறைநம்பிக்கையை வளர்ப்பதில் திருமுறை ஓதுதல் போன்ற நிகழ்ச்சிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். ஆலயங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்டபூர்வமான தீர்வுகளை வழங்க மாநில அரசு தயாராக இருப்பதாகவும், இவ்வாண்டு பேராக் மாநில இந்து சங்கத்திற்கு இதுவரை 80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்கள் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.
திருமுறை ஓதுதல் வெறும் போட்டியாக மட்டுமின்றி, தமிழ் மொழி, சைவ சமயம், பண்பாடு மற்றும் நல்லொழுக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய ஆன்மிகப் பணியாக விளங்குகிறது என்று நிகழ்வில் பங்கு கொண்ட மலேசிய இந்து சங்கத் தலைவர் தங்க. கணேசன் குறிப்பிட்டார்.








