இந்தியர்களின் உருமாற்றுப்பிரிவான மித்ராவின் மூலமாக டியூஷன் மாடானி 2026 திட்டத்தின் கீழ் இன்று 28 டியூஷன் மையங்களுக்கு மொத்தம் 2.63 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டது.
மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில், கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் உள்ள கலா மண்டபத்தில் நடைபெற்ற மானிய வழங்கும் நிகழ்வில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.
ஏழு மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 2,343 எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் மாணவர்கள் பயனடையவுள்ளனர். ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2026 வரை ஐந்து மாதங்களுக்கு இலவசமாகவும் கட்டமைக்கப்பட்ட முறையிலும் டியூஷன் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன என்று நிகழ்விற்கு தலைமையேற்ற டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துதல், கல்வி இடைவெளியைக் குறைத்தல் மற்றும் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைத்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.
டியூஷன் மையங்களுக்கு மித்ரா வழங்கியுள்ள இந்த நிதியுதவி, குறிப்பாக பி 40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில், எஸ்.பி.எம் மற்றும் எஸ்.தி.பி.எம் மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்புகளை நடத்துவதற்கு பெரும் உதவியாக அமையும் என மானியம் பெற்ற டியூஷன் மையங்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
டியூஷன் மாடானி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இந்த நிதியுதவி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், அவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








