Aug 11, 2026
Thisaigal NewsYouTube
உயர்வு மடானி : 128 இந்திய தொழில்முனைவோருக்கு 3.05 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மானியம்
தற்போதைய செய்திகள்

உயர்வு மடானி : 128 இந்திய தொழில்முனைவோருக்கு 3.05 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மானியம்

Share:

பி40 மற்றும் எம்40 பிரிவுகளைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோரின் வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மித்ராவின் உயர்வு மடானி திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 128 தொழில்முனைவோருக்கு 3.05 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இன்று கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள கலா மண்டபத்தில் நடைபெற்ற மித்ரா மானிய வழங்கும் நிகழ்ச்சியில் இதனைத் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான இந்திய பி40/எம்40 தொழில்முனைவோர் மானியத் திட்டம் – உயர்வு மடானி தொடர் 1 மூலம் தேர்வு செய்யப்பட்ட 128 தொழில்முனைவோருக்கு இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழில்முனைவோரின் தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல், செயல்திறனை அதிகரித்தல், போட்டித்திறனை வலுப்படுத்துதல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மானியம் வழங்கப்படுவதாக டத்தோஸ்ரீ ரமணன் சுட்டிக்காட்னார்.

தொழில்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மைகுரோ, குரோவ்த் மற்றும் ஹை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் தொழில் வளர்ச்சியை வலுப்படுத்துவதுடன், அவர்களின் வருமானம் மற்றும் பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதும் நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் போதுமான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்களும் உள்ளன. அத்கையோர் தேவையான ஆவணங்களை இணைத்து மறுபடியும் விண்ணப்பம் செய்ய முடியும் என்று மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டில் உயர்வு மடானி திட்டத்தின் மூலம் 700க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோருக்கு பயனளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மித்ரா சார்பில் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளுக்காக 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட 3.05 மில்லியன் ரிங்

கட்டுக்கும் அதிகமான மானியம், அந்த இலக்கை நோக்கிய முதல் கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று டத்தோ ஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, உயர்வு மடானி திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெற்ற இந்திய தொழில்முனைவோர், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிதி தங்களது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் பெரிதும் உதவியாக அமையும் என திசைகளிடம் தெரிவித்தனர்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியை தொழில் தேவைகளுக்கு முறையாகப் பயன்படுத்தி, வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதுடன், எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த உதவி துணைபுரியும் என உயர்வு மடானி திட்டத்தில் நிதி பெற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related News