ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.10-
தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கைத் தலைகீழாக ஏற்றியதாகக் கூறப்படும் 59 வயது கடைக்காரர் ஒருவர் பினாங்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் 16 புகார்கள் பெறப்பட்டதாகப் பினாங்கு காவல்துறையின் இடைக்காலத் தலைவர் முகமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
சின்னங்கள், பெயர்களின் முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் சட்டம் 1963, சிறு குற்றங்கள் சட்டம் 1955, தொடர்பு , பல்லூடகச் சட்டம் 1988, ஆகிய சட்டங்களின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. தேசியக் கொடியை அவமதிக்கும் செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இத்தகையச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.








