கெமாமான், ஆகஸ்ட்.15-
திரெங்கானு, செமாங்கொக் A, எண்ணெய் துரப்பன மேடை கடற்பகுதியில் திடீரென்று தோன்றியுள்ள கைவிடப்பட்ட ஒரு பழைய கப்பலில் எந்தவோர் ஆபத்தான ரசாயனமோ, பிணங்களோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரெங்கானுவைத் தளமாக கொண்ட 53.7 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட மூன்று மாடி கொண்ட கப்பல் ஒன்றின் மூலம் தீயணைப்பு, மீட்புப் படையின் ஆபத்தான ரசாயனத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 17 பேர் கொண்ட ஒரு சிறப்புக் குழுவினர், திரெங்கானு கடல் சார் இலாகாவின் மூன்று அதிகாரிகள் பேய்க் கப்பல் என்று கூறப்படும் அந்த பழைய கப்பல் அருகில் சென்று சோதனையிட்டனர்.
அந்தச் சோதனையில் கைவிடப்பட்ட கப்பலில் பிணங்களோ அல்லது ஆபத்தான ரசாயனமோ இல்லை என்பது உறுதிச் செய்யப்பட்டதாக கெமாமான் கடல் சார் அமலாக்க ஏஜென்சியின் இயக்குநர் அப்துல் ஹாலிம் ஹம்ஸா தெரிவித்தார்.
முதலில் மனம் ஒவ்வாத வாடை அந்த கப்பலில் இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார். கைவிடப்பட்ட நிலையில் மிதக்கும் அந்த கப்பல், பேய்க் கப்பல் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.








