மலாக்கா, செப்டம்பர்.27-
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட், மாநில பொருளாதார முன்னுரிமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களைப் போல அமைச்சு அளவில் மட்டும் தீர்மானிக்கப்படாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
மக்களின் தேவைகளைப் புறக்கணிக்காமல், பொருளாதார வளர்ச்சி, சீராகத் தொடர்வதை உறுதிச் செய்வதற்கு குறிப்பாக, மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை நிவர்த்தி செய்வதற்கு அதீத முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த ஆற்றல் உள்ளது. மலாக்காவில் உள்ளதைப் போல சுற்றுலா மற்றும் உற்பத்தித்துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இது மாநிலத்தின் செயல் திறனை ஊக்கப்படுத்துகிறது என்று இன்று சனிக்கிழமை மலாக்கா, பண்டார் ஹிலிரில் நிதி அமைச்சருடன் சுற்றுலா, உற்பத்தி துறை 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அமர்வில் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.
உயரடுக்கு மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையே அதிக இளைவெளி இருப்பதால் மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வு, இந்த 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் கருத்தில் கொள்ளப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.








