மலேசியாவில் நீண்டகாலமாக நீடித்து வரும் மியன்மார் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 1,476 மியன்மார் நாட்டினர் முதற்கட்டமாக இன்று நாடு திரும்பத் தொடங்கினர்.

உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,388 மியன்மார் நாட்டினரில், 5,000 பேர் தன்னார்வ அடிப்படையில் கட்டம் கட்டமாக தாயகம் திரும்புவதற்கான செயல்முறை இறுதி செய்யப்பட்டுள்ளது.
மியன்மார் அரசாங்கம் அதிகாரப்பூர்வ தூதரகக் குறிப்பு மூலம் வழங்கிய பட்டியலின் அடிப்படையில், முதற்கட்டமாக 1,476 பேர் இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு மருத்துவக் கப்பல் மூலம் நாடு திரும்புகின்றனர்.

உள்துறை அமைச்சு, மலேசிய குடிநுழைவுத் துறை மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்துள்ளன.
அடையாளம், ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட செயல்முறைகள் நிறைவடைந்த பின்னர், அடுத்தடுத்த கட்டங்களில் நாடு திரும்பும் நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதுடன், சட்டத்தின் அடிப்படையிலும் மனிதாபிமான முறையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.








