Feb 16, 2026
Thisaigal NewsYouTube
கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு லத்தீஃபா கோயா கடும் கண்டனம்: இது இஸ்லாமிய பண்பல்ல எனச் சாடல்
தற்போதைய செய்திகள்

கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு லத்தீஃபா கோயா கடும் கண்டனம்: இது இஸ்லாமிய பண்பல்ல எனச் சாடல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

அனுமதியற்ற இந்து கோவில்களைத் திட்டமிட்டுச் சேதப்படுத்துவதையும், இந்திய சமூகத்தினருக்குத் தொல்லை கொடுப்பதையும் வழக்கறிஞர் லத்தீஃபா கோயா வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இத்தகையச் செயல்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு எதிரானது என்றும், இனவாதப் போக்கினால் தூண்டப்பட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமது 'X' தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற மத வழிபாட்டுத் தலங்களை அழிப்பதையோ அல்லது பிற மதங்களை இழிவுபடுத்துவதையோ இஸ்லாம் தடை செய்துள்ளதை லத்தீஃபா சுட்டிக் காட்டினார்.

"ஒரு நாட்டில் நீங்கள் பெரும்பான்மையினராகவும், அரசியல் பலம் கொண்டவர்களாகவும் இருக்கும் போது மற்றவர்களைத் துன்புறுத்துவது மிகவும் எளிது. இது ஒரு கோழைத்தனமான செயல். இந்திய சமூகம் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பலவீனமான, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுபான்மையினர்," என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையருமான லத்தீஃபா இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், அனுமதியற்ற கோவில்களை "சுத்தம்" செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகளுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில், ரவாங்கில் ஒரு கும்பல் ஒரு கோவிலைச் சேதப்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் பிரதமரின் அந்த "சுத்தம் செய்யும்" உத்தரவின்படியே செயல்பட்டதாக அவர்களது வழக்கறிஞர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையான பிரச்சனை அரசியல் மேல்தட்டு வர்க்கத்தினரிடம் தான் உள்ளது என்று கூறிய லத்தீஃபா, "நமது நிலம்", "நமது மதம்" போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களைக் கொண்டு சாதாரண மலாய் மக்களின் கவனத்தை அவர்கள் திசை திருப்புவதாகச் சாடினார்.

நமது நிலத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் '1960 நிலக் கையகப்படுத்தும் சட்டம்' தான். பெரிய நில மேம்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தில் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்து இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு உதாரணமாக 'கம்போங் சுங்கை பாரு' விவகாரத்தைக் குறிப்பிட்ட அவர், செல்வாக்கும் பணமும் படைத்தவர்கள் அப்பாவி மக்களின் வீடுகளைக் குறைந்த இழப்பீட்டில் இடிப்பதைக் கடுமையாக விமர்சித்தார்.

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இருந்த ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், கடந்த ஆண்டு பள்ளிவாசல் கட்டுவதற்காக இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தையும் லத்தீஃபா சுட்டிக் காட்டினார்.

"மிகவும் செல்வாக்கும் பண பலமும் கொண்ட ஒரு 'மலாய்' வணிக நிறுவனம் அந்த நிலத்தை வாங்குவதற்கு முன்பே, பல தசாப்தங்களாக அந்த ஆலயம் அங்குதான் இருந்தது. அந்த நிலத்தில் ஆலயம் இருப்பதை நன்கு அறிந்தே அவர்கள் அதை வாங்கினார்கள்.

இருப்பினும், அந்த ஆலயம் அங்கு 'அத்துமீறி' நுழைந்திருப்பதாகவும், அந்த 'அத்துமீறலுக்காக' அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதாகவும் ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக லத்தீஃபா சுட்டிக் காட்டினார்.

Related News

கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு லத்தீஃபா கோயா கடும் கண்டனம்... | Thisaigal News