பெர்மாத்தாங் பாவோ, ஜனவரி.24-
மலேசிய ரிங்கிட் ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது அரசாங்கத்தின் சிறந்த நிர்வாகக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதித்தன்மையை நிரூபிப்பதாக உள்ளது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ரிங்கிட்டின் இந்த வலுவான வளர்ச்சி தற்செயலாக நடந்தது அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் அமைதியை உறுதிப்படுத்துதல், திறமையான நிர்வாகம் மற்றும் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான பலனே இது என்றார்.
அரசியல் பலமாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். நமது அண்டை நாடுகள் சிலவற்றை நாம் பார்த்தால், குறிப்பாகத் தாய்லாந்தில் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நான்கு அல்லது ஐந்து பிரதமர்கள் மாறிவிட்டனர். இத்தகைய சூழல் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆனால் மலேசியா இப்போது மாறுபட்டுள்ளது. பொருளாதார ரீதியாக, நமது ரிங்கிட் அண்டை நாடுகளை விட மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆசியாவிலேயே மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது என்றார்.
இன்று சனிக்கிழமை பெர்மாத்தாங் பாசீர், செபராங் பிறை தெங்கா மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற 'மடானி கலாச்சார கர்னிவல் மற்றும் 2026 பினாங்கு மக்கள் விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.








