பெர்லிஸ் மாநிலத்தில் 8 மாத பெண் குழந்தை மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவத்தில், 35 வயதுடைய பெண் பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் மொக்சின் ரோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விசாரணைக்குப் பின்னர், அப்பெண் வரும் ஜூன் 16-ஆம் தேதி வரை போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் ஏற்பட்ட உள்காயத்துடன் அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில் அக்குழந்தையின் தலையில் ஏற்பட்ட தாக்குதலால், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








