அமைச்சரவை மாற்றத்தை கோடிகாட்டியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விவகாரம் தொடர்பாக மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுடன் தாம் நடத்தவிருக்கும் சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கான சாத்தியம் இருப்பதையும் பிரதமர் விளக்கினார்.
எனினும் நடப்பு சூழ்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு தாம் அதிக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
காரணம், அமைச்சரவையில் ஒரு பதவி மட்டுமே காலியாக உள்ளது. டத்தோ செரி சலாஹுடின் அயூப் மறைவிற்கு பிறகு உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் பதவி மட்டுமே காலியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.








