கோலாலம்பூர், டிசம்பர்.13-
கோலாம்பூர் – ஜோகூர் பாரு இடையிலான மின்சார ரயில் சேவை நேற்று அதிகாரப்பூர்வமாகத் துவங்கியதையடுத்து, அதில் பயணம் செய்த தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங், தமக்கு இந்த ரயில் பயணமானது மனநிறைவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 4.40 மணியளவில் கூலாய் ரயில் நிறுத்தத்தில் ஏறிய அவர், 8.50 மணியளவில் கோலாலம்பூரை வந்தடைந்தார்.
கூலாயில் கனமழை பெய்து கொண்டிருந்த வேளையில், தாம் கோலாலம்பூர் வரை காரில் பயணம் செய்திருந்தால், குறைந்தது 5 முதல் 6 மணி நேரங்கள் ஆகியிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், மின்சார ரயிலானது 4 மணி நேரத்தில் வந்தடைந்ததைப் பாராட்டினார்.
வசதியான இருக்கைகள், இதமான வெப்பநிலை, மின் socket-கள், Café உள்ளிட்ட பல வசதிகள், இந்த ரயில் பயணத்தை மிகவும் இனிமையாக்கியதாகவும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
அதே வேளையில், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே வரும் 2026-ஆம் ஆண்டு, ஜனவரி 11-ஆம் தேதி வரையில், கோலாலம்பூர் – ஜோகூர் இடையிலான இந்த ரயில் சேவைக்கான டிக்கெட் விலையில் 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது கேடிஎம்பி நிறுவனம்.








