கோலாலம்பூர், பிப்ரவரி.08-
நாட்டின் அமைதியையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் பேணுவது அதிகாரிகளின் கடமை மட்டுமல்ல, அஃது அனைத்துத் தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும் என கோலாலம்பூர் காவற்படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வலியுறுத்தினார். உளவுத்துறை தகவல்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, சட்டத்திற்குப் புறம்பான வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான 'காரா' அமைப்பின் பேரணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகையையும் நாட்டின் நிலைத்தன்மையையும் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான கருத்துகளைத் தெருப் போராட்டங்கள் வழியாக அன்றி, முறையான அரசாங்க வழிகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். இனம், மதம், அரச குடும்பம் தொடர்பான 3R உணர்ச்சிகரமான விவகாரங்களைத் தூண்டிவிட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வேண்டாம் எனப் பொதுமக்களை ஃபாடில் மார்சுஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.








