நீலாய், நவம்பர்.12-
நீலாய், பண்டார் பாரு நீலாயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 18 ஆவது மாடியிலிருந்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் நிகழ்ந்தது.
சீன நாட்டுப் பிரஜையான 18 வயதுடைய அந்த மாணவரின் உடல், அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் ஐந்தாவது மாடியில் கிடந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த அந்த அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள், 999 எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த சீனப் பிரஜை தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து அந்த வீட்டில் வாடகைக்கு இருந்து வந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.
சவப் பரிசோதனைக்காக அந்த மாணவனின் உடல், ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








