May 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 'தேனிசை பாட்ஷா' தேவா: "திரைக்குப் பின்னால் இருந்தாலும் எங்களை உயர்த்திப் பிடித்தது மக்களே
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 'தேனிசை பாட்ஷா' தேவா: "திரைக்குப் பின்னால் இருந்தாலும் எங்களை உயர்த்திப் பிடித்தது மக்களே

Share:

'தேனிசைத் தென்றல்' தேவா அவர்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி வரும் மார்ச் 28-ஆம் தேதி பினாங்கு செத்தியா ஸ்பைஸ் (Setia SPICE) அரங்கில் நடைபெறவுள்ளது. கீ குளோபல் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் குகிலன் முன்னெடுக்கும் இந்த "Thenisai Baasha Deva Live in Penang" நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க தேவா பினாங்கு வருகை புரிந்துள்ளார்.

இதனையொட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு பேவியூ ஹோட்டலில் உள்ள 'Mantra Indian Cuisine' உணவகத்தில் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் , பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தேவா, கடந்த முறை பினாங்கில் தமக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மீண்டும் பினாங்கு ரசிகர்களைச் சந்திக்க வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

"திரையில் ஒரு ஹீரோவாகவோ, வில்லனாகவோ அல்லது குணச்சித்திர வேடங்களிலோ நடித்திருந்தால் மக்களுக்கு எளிதில் அறிமுகமாகியிருக்க முடியும். ஆனால், நாங்கள் திரைக்குப் பின்னால் இருந்து இசையமைக்கும் கலைஞர்கள். அப்படி இருந்தும், செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களை அடையாளம் கண்டு ஓடிவந்து ஆட்டோகிராப் கேட்பதும், செல்பி எடுத்துக் கொள்வதும் வியப்பாக இருக்கிறது. எங்களை இந்த உயரத்தில் வைத்திருக்கும் மக்களுக்கும், அதனைச் சரியாகக் கொண்டு சேர்த்த செய்தியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்," என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தேவாவின் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி, பினாங்கு ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related News