அம்பாங், அக்டோபர்.29-
சிலாங்கூர், அம்பாங், ஜாலான் மெர்டேக்காவில் உள்ள சீனக் கோவில் ஒன்றில் நுழைந்து ரகளை புரிந்ததுடன், நாசக்காரியத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை 9 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அந்த ஆடவர் முதலில் ரகளை புரிந்ததைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரேலா உறுப்பினர் ஒருவர், 35 வயதுடைய அந்த நபரை அணுகியுள்ளார். எனினும் அந்த நபர், மதுபோதையில் இருப்பது பின்னர் தெரிய வந்தது என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
கோவில் வளாகத்தை விட்டு வெளியேறும்படி சம்பந்தப்பட்ட ரேலா உறுப்பினர் எச்சரித்துள்ளார். எனினும் அந்த நபர், அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் ரகளைப் புரியத் தொடங்கியதுடன் கோாவிலில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கும் மேடையைக் கீழே தள்ளி நாசக்காரியத்தில் ஈடுபட்டதாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.
பின்னர் அந்த நபர் பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பிடிப்பட்ட நபருக்கு போதைப் பொருள் தொடர்பில் எட்டு குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.








