கோலாலம்பூர், டிசம்பர்.19-
2025-ஆம் ஆண்டுக்கு விடைக்கொடுப்பதற்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. வரும் காலங்களிலும் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார மற்றும் நிதித்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்
அமெரிக்க மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களைக் குறைத்து வருவதால், மலேசியாவின் Overnight Policy Rate எனும் OPR மற்றும் அமெரிக்க வட்டி விகிதங்களுக்கு இடையிலான இடைவெளி குறையும். இது முதலீட்டாளர்களை மலேசியாவின் பக்கம் ஈர்க்கும் என்று நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மலேசியா தற்போது பிராந்தியத்தின் தரவு மையங்களுக்கான மையப் புள்ளியாக உருவெடுத்து வருவது பொருளாதார வளர்ச்சிக்கும் ரிங்கிட்டின் மதிப்பிற்கும் பெரும் ஆதரவாக உள்ளது.
மலேசியாவின் முன்னணி முதலீட்டு வங்கியான Kenanga Invesment Bank-கின் கணிப்புப்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் 8 சென்னாகவும், 2026-இல் இது 3 ரிங்கிட் 95 சென்னாகவும் வலுவடையலாம் எனக் கணித்துள்ளது.
நாட்டின் தொழில்துறை மேம்பாட்டு நிதி நிறுவனமான MIDF, ரிங்கிட்டின் மதிப்பு சராசரி மதிப்பு 4 ரிங்கிட் 23 சென் முதல் 4 ரிங்கிட் 34 சென் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறது.
முன்னணி வங்கிகளாக Maybank மற்றும் OCBC ஆகியவற்றின் கணிப்புப்படி 2025-இன் இறுதியில் 4 ரிங்கிட் 10 சென் முதல் 4 ரிங்கிட் 15 சென் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.








