சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 25 ஆண்டுகால ஆட்சியைப் போற்றும் வகையில், சிறப்பு நூல், தபால் தலை மற்றும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளன.
ஷா ஆலாமில் உள்ள பெர்புஸ்தாக்காஆன் ராஜா துன் ஊடா நூலகத்தில் இன்று நடைபெற்ற வெள்ளி விழா நிகழ்ச்சியில், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இவற்றை அறிமுகப்படுத்தினார். மெஞ்சூலாங் தக்தா: 25 தாஹுன் பெமெரிந்தாஹான் சுல்தான் சிலாங்கூர் என்ற தலைப்பிலான சிறப்பு நூல், புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்புத் தபால் தலையில் அரசவைக்கூடம், இஸ்தானா அலாம் ஷா அரண்மனை, அரச மரபுத் தலைப்பாகை மற்றும் பாரம்பரிய வாள் போன்ற அரச மரபுச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. இவை சிலாங்கூர் சுல்தானகத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் அடையாளத்தை எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாத்து எடுத்துச் செல்லும் முயற்சி என அமிருடின் தெரிவித்தார்.








