ஜோகூர் மாநிலம், யோங் பெங் பள்ளியில் நான்காம் படிவ மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைருல் ஃபைசால் கொலை செய்யப்பட்ட குறிப்பிட்ட பள்ளி வளாகப் பகுதியில், சிசிடிவி கேமராக்கள் இல்லை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, மேலதிக வகுப்புகள் முடிந்த பின்னர் 16 வயதான ஐரின் சோஃபியா, பள்ளி மண்டபத்தில் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பள்ளியில் சிசிடிவி கேமராக்கள் இருந்த போதிலும், சம்பவம் நடந்த இடத்தில் அவை பொருத்தப்படவில்லை என்றும், இதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஃபாட்லீனா சீடேக் நாடாளுமன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், பள்ளியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் கண்காணிப்பு பதிவுகள் மற்றும் பணிப் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சம்பவத்தன்று பாதுகாப்புப் பணியில் இருந்த நிறுவனம் தனது கடமையை முறையாகச் செய்யத் தவறியது உறுதியானால், எச்சரிக்கை அறிவிப்பு, நிதி அபராதம் முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்வது வரை நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபாட்லீனா சீடேக் உறுதியளித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான குற்றவியல் விசாரணை போலீசாரின் பொறுப்பு என்றாலும் கூட, தமது அமைச்சின் அதிகார வரம்புக்குள் உட்பட்ட நடைமுறைகளுக்காகக் காத்திருக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை சரிசெய்வதுடன், விதிமீறல் அல்லது அலட்சியம் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபாட்லீனா சீடேக் கூறினார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சில மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 16 வயதான மாணவர் ஒருவர் ஆறு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு மூன்றாம் கட்ட சிசிடிவி பொருத்தும் திட்டத்தின் கீழ் 15 மில்லியன் ரிங்கிட் செலவில் 1,000 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
முதல் இரண்டு கட்டங்களில் 8 மில்லியன் ரிங்கிட் செலவில் 533 உறைவிடப் பள்ளிகளில் சிசிடிவி அமைக்கப்பட்டதாகவும் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சில பள்ளிகளில் சிசிடிபி கேமராக்கள் பழுதடைந்து, முறையான பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதை ஒப்புக் கொண்ட ஃபாட்லீனா, பழுதான கேமராக்கள் குறித்து அமைச்சகத்துக்கு பள்ளிகள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.








