Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பிரபல யூடியூபர் மீது கொடூரத் தாக்குதல்; கண் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

பிரபல யூடியூபர் மீது கொடூரத் தாக்குதல்; கண் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி

Share:

பிரபல யூடியூபர் கால்பந்து விமர்சகருமான ஒருவர், கடந்த சனிக்கிழமை இரவு பண்டார் ஸ்ரீ டாமன்சாரா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் அவரது கண் எலும்பு முறிவு உட்பட பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ள பெட்டாலிங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஷம்சுதின் மாமட், இச்சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை இரவு 7.56 மணியளவில் தங்களுக்குப் புகார் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி, பாதிக்கப்பட்ட நபர் தனது வாகனத்தின் டயருக்குக் காற்று நிரப்பிக் கொண்டிருந்தபோது, யமஹா எல்சி மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அவரை நோக்கி வந்துள்ளனர்.

அவர்கள் அந்த யூடியூபரைத் தொடர்ந்து பலமுறை தாக்கியதுடன், இச்சம்பவத்தைக் காணொளியாகவும் பதிவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இக்கொடூரத் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகக் குறிப்பிட்ட போலீஸ் தலைவர், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது டேனிஷ் நூர் அஸ்ரி (013-6201412) என்பவரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், வழக்கைக் குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் இது குறித்து அவதூறுகளைப் பரப்ப வேண்டாம் என்றும் போலீஸ் எச்சரித்துள்ளனர்.

Related News