தாவாவ், ஜாலான் குஹாரா பகுதியில் உள்ள தாமான் அம்பார் விளையாட்டு திடலில் கடந்த திங்கட்கிழமை ஆயுதங்களுடன் மாணவர்கள் குழுவாக மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக, நேற்று 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்டி மாட் ஜுசோ கூறுகையில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் விசாரணைக்கு உதவும் வகையில் தாவாவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இந்த மோதல் தொடர்பாக போலீசாருக்குப் புகார் கிடைத்தது.
முதற்கட்ட விசாரணையில், இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக மோதல் தொடங்கியதும், பின்னர் அதில் மேலும் பல மாணவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிய மோதல் காணொளி, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் அவர்களின் பங்கையும் அடையாளம் காண உதவியது.
மேலும், விசாரணையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கைத்தொலைபேசியும் கருப்பு நிற மிதிவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டதாக ரோஸ்டி மாட் ஜுசோ தெரிவித்துள்ளார்.








