கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.11-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மரணம் தொடர்பில் சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சவப் பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
சபா, கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் I மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழலை காலை 11 மணிக்குத் தொடங்கிய சவப் பரிசோதனை இரவு 7.30 மணிக்கு நிறைவு பெற்றது.
பின்னர் 13 வயது மாணவியின் உடல், மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் தஞ்சோங் ஊபி முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, கொட்டும் மழைக்கு மத்தியில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் உள்ளூர் மக்கள் அந்த மாணவியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
சபா, பாபார், லிமாவான், துன் டத்து முஸ்தபா, சமய தேசிய இடைநிலைப்பள்ளியின் மாணவியான ஸாரா கைரினா மகாதீர், கடந்த ஜுலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாம் தங்கியிருந்த பள்ளி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
கடுமையானk காயங்களுடன் கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் 1,மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸாரா கைரினா மறுநாள் மரணமுற்றார். அவரின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து சடலத்தைத் தோண்டுவதற்கு சட்டத்துறை அலுவலகம் அனுமதி அளித்தது.








