கோலாலம்பூர், செப்டம்பர்.04-
ஜோகூர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மிதமான நில நடுக்கம் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து வீட்டிற்கான காப்புறுதி பாலிசியை வாங்கியவர்கள், நில நடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்குக் காப்புறுதி பாதுகாப்பு அளிக்கப்படுகின்றனவா என்பது குறித்து சரிபார்க்கும்படி வீட்டு உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள், பேரிடர் போன்ற இயற்கைச் சீற்றத்திற்கு வீடுகளுக்குக் காப்புறுதி பாதுகாப்பு வழங்கும் அம்சத்தைச் சேர்த்துக் கொண்டு இருக்காது. மாறாக, தீ போன்றவற்றுக்கு மட்டுமே காப்புறுதிப் பாதுகாப்பு தர வல்லதாக இருக்கும் என்று PIAM (பியாம்) எனப்படும் மலேசிய பொது காப்புறுதிச் சங்கம் கூறுகிறது.
எனினும் சபா மற்றும் தீபகற்ப மலேசியாவில் சில இடங்களில் அண்மையில் உணரப்பட்ட நில நடுக்கங்கள், வீட்டிற்கான காப்புறுதிப் பாதுகாப்பைச் சரி பார்த்துக் கொள்வதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியை விடுத்துள்ளது என்று பியாம் தலைமை நிர்வாக அதிகாரி சுவான் கிம் சூன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வெள்ளத்தை விட பூகம்பங்கள் குறைவாகக் காணப்பட்டாலும், வானிலை முறைகளைக் கணிக்க முடியாத நிலையில் அவை ஓர் அச்சறுத்தலாகவே மாறியுள்ளன. எனவே வீட்டிற்குக் காப்புறுதி பாலிசி எடுத்தவர்கள் அதில் இயற்கை சீற்றங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறதா? என்பதை ஒரு முறை சரி பார்த்துக் கொள்வது அவசிமானதாகும் என்று சுவான் கிம் சூன் வலியுறுத்தியுள்ளார்.








