உலு சிலாங்கூர், ஜனவரி.25-
இன்று சனிக்கிழமை அதிகாலை ரவாங்கிலிருந்து கெடாவின் Sik நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 45 வயது பெண் ஒருவர், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 405.8-ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூரில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
இது குறித்து உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் கூறுகையில், காலை 6.20 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற அந்தப் பெண், சாலையின் மத்தியில் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அதே திசையில் வந்த ஒரு லாரியும் காரும் அவர் மீது மோதி உடல் நசுக்கின. அதனைத் தொடர்ந்து, அதே திசையில் வந்த 62 வயது நபர் ஓட்டி வந்த BMW ரக மோட்டார் சைக்கிள் விபத்தைத் தவிர்க்க முயன்ற போது, பின்னாலிருந்து வந்த ஒரு வேன் அதன் மீது மோதியது என்று அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை உதவியாளராகப் பணி புரிந்து வந்த அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிச் செய்யப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
BMW மோட்டார் சைக்கிளில் பயணித்து காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அந்த லாரி மற்றும் காரை போலீஸ் துறை தற்போது தீவிரமாகத் தேடி வருகிறது என்று சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.








