Feb 22, 2026
Thisaigal NewsYouTube
ரவாங்கில் போக்குவரத்துச் சோதனையின் போது அதிகாரிகள் மீது பட்டாசு வீச்சு
தற்போதைய செய்திகள்

ரவாங்கில் போக்குவரத்துச் சோதனையின் போது அதிகாரிகள் மீது பட்டாசு வீச்சு

Share:

ரவாங், பிப்ரவரி.22-

ரவாங், LATAR விரைவுச் சாலைக்கு அருகே சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கும்பல் அவர்கள் மீது பட்டாசுகளை வீசி எறிந்ததோடு தரக்குறைவான வார்த்தைகளால் வசைபாடி அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி அதிகாரிகள் அபராதம் விதித்துக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த குன்றுப் பகுதியிலிருந்து 20-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு கருதி அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து வெளியேறிய நிலையில், சீனப் புத்தாண்டு காலச் சிறப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்தக் கும்பல் குறித்து சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்ரின் போர்ஹான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்படியாகப் பணியாற்றும் அதிகாரிகளை அச்சுறுத்தும் இத்தகைய செயல்களை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், இது குறித்து காவல்துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Related News