கோலாலம்பூர், நவம்பர்.24-
சுங்கை பூலோ தொகுதியில், எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வுகளில் உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்த 130 மாணவர்கள், தங்களது உயர்க்கல்வியைத் தொடர தலா 50,750 ரிங்கிட் கல்வி உதவித் தொகையாகப் பெற்றனர்.
இந்தக் கல்வி உதவித் தொகையானது, 38,500 ரிங்கிட் பேங்க் ரக்யாட்டில் இருந்தும், மீதமுள்ள 12,250 ரிங்கிட் தனது சொந்த நிதியில் இருந்தும் வழங்கப்படுவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு, இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், பேங்க் ரக்யாட்டும், யயாசான் பேங்க் ரக்யாட்டும் இணைந்து எஸ்பிஎம் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சியடையும் மாணவர்களின் கல்வி சார்ந்த பல உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், 2024-ஆம் ஆண்டு முதல், சுங்கை பூலோ தொகுதியைச் சேர்ந்த மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் வசதி வாய்ப்பற்றவர்களுக்கு 1.2 மில்லியன் ரிங்கிட் வரையில், பேங்க் ரக்யாட்டும், யயாசான் பேங்க் ரக்யாட்டும் உதவிகள் வழங்கியிருக்கின்றன.
இது போன்ற உதவிகள் குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தவும், மக்களின் நல்வாழ்வை வலுப்படுத்தவும் உதவுவதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.








