சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 70 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி, அவர்களின் மனைவி, தாயார், பிள்ளைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக சுங்கை புலோ சிறைச்சாலைக்கு வெளியே வெட்ட வெளியில் உண்ணா விரதப் போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர்.
அலோர் ஸ்டாரில் 36 பேரும் சுங்கை புலோவில் 34 பேரும் சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள், சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவர்களின் துன்பத்தில் தாங்களும் பங்கு கொள்ளும் வகையில் சிறைச்சாலைக்கு வெளியே உண்ணா விரதத்தில் இறங்கி உள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறிகின்றனர். சொஸ்மாவின் கீழ் ஓரிரண்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பு குறித்து பலர் பேசிய போதிலும் இன்றுவரை இதற்கு தீர்வு பிறக்கவில்லை என்று சுங்கை புலோ சிறைச்சாலைக்கு வெளியே அடிப்படை வசதி ஏதுமின்றி வெட்ட வெளியில் உண்ணாவிரத்ததில் ஈடுப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்களின் துயரத்தை விவரித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சுங்கை புலோ சிறைச்சாலைக்கு வெளியே நேரில் சந்தித்த ரவாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரானசுவா வெய் கியாட், இவ்விவகார தொடர்பாக தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவிருப்பதாக உறுதி அளித்தார். தவிர, சொஸ்மா கைதிகள் அனைவரையும் விடுவிக்கவும், சொஸ்மா தடுப்பு சட்டத்தை மீட்டுக் கொள்ளவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு சாரா இயக்கமான நம்பிக்கை மலேசியாவின் தேசியத் தலைவர் கலைவாணர் கோரிக்கை விடுத்துள்ளார்.








