Jan 7, 2026
Thisaigal NewsYouTube
இனம், சமயம் சார்ந்த விவகாரங்களில் அரசியல் வேண்டாம்: பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

இனம், சமயம் சார்ந்த விவகாரங்களில் அரசியல் வேண்டாம்: பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கடும் எச்சரிக்கை

Share:

புத்ராஜெயா, ஜனவரி.05-

இனம் மற்றும் சமயம் சார்ந்த உணர்ச்சிகரமான விவகாரங்களை அரசியலாக்குவோருக்கு எதிராக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் இனம், சமயம் மற்றும் அரசமைப்பு ஆகிய 3R விவகாரங்களைத் தங்களின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்துவதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இத்தகைய உணர்ச்சிகரமான விவகாரங்களில் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அந்தஸ்தைப் பாராமல் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

அமைதி நிலவும் இந்த நாட்டில் விஷ விதைகளைத் தூவுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை என்று அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர பேரணியில் ஆற்றிய 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு உரையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

மலேசியாவின் பன்முகத்தன்மையே நாட்டின் பலம் என்றும், அதனைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாயக் கடமை என்றும் அவர் கூறினார். தீவிரவாதப் போக்கு மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை முளையிலேயே கிள்ளியெறிய பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளையும், இனவாதத் தூண்டல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் முன்னேற்றமடைந்த நாடாக மாற்றுவதற்கு சமூக நல்லிணக்கம் அவசியம் என்பதைப் பிரதமர் தனது உரையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதே வேளையில் இஸ்லாம் மதம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் தரவுகளுடன் பதிலடி கொடுத்தார். இஸ்லாம் மதம் ஒரு போதும் புறக்கணிக்கப்படவில்லை என்பதற்குச் சான்றாக, நடப்பு ஆண்டில் இஸ்லாமிய விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது, வரலாறு காணாத வகையில் 200 கோடி ரிங்கிட்டாக ஆக உயர்த்தப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இது முந்தைய அரசாங்கங்களை விட அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News