கோலாலம்பூர், ஜனவரி.06-
ஒருவர் திவாலானவராக இருந்தாலும், ஒரு வழக்கில் சாட்சியம் அளிப்பதற்கு மலேசியச் சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. அந்த வகையில் முன்னாள் கலை, பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான டான் ஶ்ரீ அப்துல் காடீர் ஷையிக் ஃபாட்லீனா திவாலானர் என்ற நிலை இருந்தாலும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லான் மாட் நோர் தெரிவித்தார்.
தொழிலதிபர் டத்தோ ஶ்ரீ அலிஃப் ஷுக்ரி கமருஸாமானுக்கு எதிராக 86 வயது முன்னாள் அமைச்சர் டான் ஶ்ரீ அப்துல் காடீர் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் ஒரு திவாலானவரான அந்த முன்னாள் அமைச்சர் சாட்சியம் அளிப்பதற்கு தகுதியில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபத்தைத் தொடர்ந்து நீதிபதி மேற்கண்ட முடிவை தெரிவித்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தொழில் அதிபர் அலிஃப் ஷுக்ரி தனது சமூக வலைதளப் பக்கங்களில், முன்னாள் அமைச்சர் ஒருவர் தமக்கு பல கோடி ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டியிருப்பதாகப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு டான் ஶ்ரீ அப்து காடீரைக் குறிப்பதாகக் கூறி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக அந்த முன்னாள் அமைச்சர் 70 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி இந்த அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.








