சுபாங் ஜெயா, ஜூலை.23-
பூச்சோங், ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் கும்பல் ஒன்று, ஆடவர் ஒருவரை, லோரியில் தூக்கிப் போட்டு, கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
32 வயதுடைய அந்தச் சந்தேகப் பேர்வழி, நேற்று இரவு 10 மணியளவில் சுபாங் ஜெயா, SS19, சாலையோரத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பிடிபட்ட நபருக்கு இரண்டு குற்றப்பதிவுகள் உள்ளன. அந்த நபர், தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நபரை, லோரியில் கடத்திச் சென்ற காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூக வளைத்தலங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடன் தொடர்பாக அந்த உள்ளூர் ஆடவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








