சிப்பாங், ஆகஸ்ட்.11-
தொலைக்காட்சி பிரபலம் கீதாஞ்சலியின் கணவரும், தொழில் அதிபருமான டத்தோ ஶ்ரீ ஜி. ஞானராஜாவை அவரின் வீட்டில் மடக்கிய ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல் ஒன்று விடுத்துள்ள மிரட்டல், பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் வழக்குடன் தொடர்புடையது அல்ல என்று போலீஸ் துறை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
லிம் குவான் எங் வழக்கில் அரசு தரப்பின் முக்கியச் சாட்சி என்ற முறையில் ஞானராஜாவின் பங்களிப்புக்கும், அவரிடம் கொள்ளைக் கும்பல் விடுத்ததாகக் கூறப்படும் மிரட்டலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள ஞானராஜாவின் வீட்டில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுரையில் 16 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகப் பேர்வழிகள் குறித்து இதுவரையில் புதிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஞானராஜா வீட்டில் களவாடப்பட்டதாகக் கூறப்படும் விலை உயர்ந்த ஆபரணங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று டத்தோ ஷாஸெலி காஹார் விளக்கினார்.








