Dec 4, 2025
Thisaigal NewsYouTube
துருன் அன்வார் பேரணி விரக்தியால் ஒன்றுபட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

துருன் அன்வார் பேரணி விரக்தியால் ஒன்றுபட்டுள்ளனர்

Share:

ஷா ஆலாம், ஜூலை.28-

கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வுப் பெற்றவர்கள் என சாதாரண மலேசியர்கள் ஆயிரக்கணக்கில் துருன் அன்வார் போராட்டதில் பங்கேற்றது, சித்தாந்தத்தினால் அல்ல. மாறாக விரக்தியால் ஒன்றுப்பட்டுள்ளனர் என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ வர்ணித்துள்ளார்.

அதிகரித்து வரும் செலவினங்களான அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு மத்தியில் அல்லாடும் ஒரு நாட்டில், உணவுப் பணவீக்கம், ஊதியத்தில் மாற்றம் இல்லாதது மற்றும் மிகக் குறைவான குறைந்தபட்ச ஊதியம் முதலியவற்றுக்கு சலுகைத் திட்டங்களை கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் அல்ல துருன் அன்வார் பேரணி. மாறாக, இது அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களின் கூட்டுப் பெருமூச்சாகும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

நடுத்தர வர்க்கம் சுருங்கி வருகிறது. தொழிலாளர் வர்க்கம் உடைந்து வருகிறது. அரசியல்வாதிகள் சாமானிய மக்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர் என்ற உணர்வு வளர்ந்து வருகிறது. எனவே அரசியலில், தாங்கள் உயிர் வாழ்வதற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளுக்கான ஒரு முழக்கமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தன்னலமற்ற பேராட்டம் என்று சொல்லவிட முடியாது. மாறாக, சுருங்கச் சொன்னால், அரசியல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், இழந்தவர்கள் சீர்திருத்தவாதிகளைப் போல் இந்தப் பேரணியில் வேடமிட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் உண்மை இருக்குமானால், ஊழலை ஒழித்தல், இனவெறியை முடிவுக்குக் கொண்டு வருதல், பொது சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஓரங்கட்டப்பட்ட அனைத்து மலேசியர்களையும் மேம்படுத்துதல் பற்றிய பரந்த ஒருமித்தக் கருத்தைப் பிரதிபலித்து இருக்கும். இந்தப் பேரணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மரியாதை கிடைத்து இருக்கும். ஆனால், அது அத்தகைய போராட்டம் அல்ல என்று சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டார்.

எது எப்படி இருப்பினும் சீர்திருத்தம் என்ற வாக்குறுதியின் பேரில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மலிவான விளம்பரங்களுக்காக நடத்தப்படும் இத்தகையப் பேரணியினால் அவர் கவனச் சிதறலுக்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது. மாறாக, அவர் தமது எஞ்சிய பதவிக் காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும். அரசின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் துணிச்சலான, மறுபகிர்வு கொள்கைகளுக்குச் செலவிடப்பட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ ஓர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News