மன்னராட்சி முறை குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, 49 வயதுடைய நுருல் ஹுதா பாஜுரி,எனும் பெண்மணி மீது ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் மாதம், 'டிக்-டாக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' தளங்கள் வழியாக மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கில் கருத்துகளைப் பதிவிட்டதாக அவர் மீது இரண்டு புகார்கள் வாசிக்கப்பட்டன.
குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அவருக்கு, நீதிபதி அஸ்ஹார் ஒஸ்மான் 8,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கினார். மாதம் 3,000 ரிங்கிட் வருமானம் ஈட்டும் அவர், 16 வயது பிள்ளையைப் பராமரிக்கும் ஒரு தனித்து வாழும் தாய் என்பதால் ஜாமீன் தொகை குறைக்கப்பட்டது.
இருப்பினும், கடப்பிதழை ஒப்படைக்கவும், மாதந்தோறும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தை எதிர்நோக்கியுள்ளார்.








