அம்பாங் ஜெயா, பிப்ரவரி.08-
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி, உலு கிள்ளான், தாமான் ஹில்வியூவில் (Taman Hillview) உள்ள ஒரு வீட்டில் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பாதுகாப்புப் பெட்டகத்தைக் கொள்ளையடித்த சந்தேக நபர்களைப் போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.
அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கைருல் அனுவார் காலிட் கூறுகையில், இச்சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்வது உள்ளிட்ட விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும், பாதிக்கப்பட்டவரின் வீட்டைச் சுற்றியுள்ள கேமரா பதிவுகளைச் சோதிக்கவும் புலனாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, ஒரு தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்த மூன்று நபர்கள், அங்கிருந்த சுமார் 100 கிலோ எடை கொண்ட பாதுகாப்புப் பெட்டகத்தை திருடிச் சென்றுள்ளனர். அந்தப் பெட்டியில் தங்கம் மற்றும் ரொக்கப் பணம் என மொத்தம் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் இருந்தன.
பாதிக்கப்பட்ட தொழிலதிபர் தனது மனைவியுடன் கிளந்தானில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் துணிகரக் கொள்ளை நடந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.








