நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து அங்கு மாயமான 55 மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் அடங்கிய 95 பேர், விஸ்மா புத்ராவில் இன்று அதிகாரிகளைச் சந்தித்து, சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெற்றனர்.
அதேவேளையில் அவர்கள் அனைவரும் தங்களது கேள்விகளையும் அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைத்தனர்.
இதனிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பின்னர் அடையாளம் மற்றும் நிலை உறுதிப்படுத்தப்படாதவர்களுக்கு, வெளிநாட்டினரையும் உள்ளடக்கிய வகையில், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நேபாள அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அந்நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவை என்றும், இதுவரை அமலுக்கு வரவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேபாள அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
குடும்பங்களுக்கு தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் பேரிடர் மீட்புக் குழுவான ஸ்மார்ட், போலீஸ், தடயவியல் துறை, மலேசியத் தூதரகம் மற்றும் தேசியப் பதிவிலாகா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








