மலாய்க்காரகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தாம் தோற்றுவிட்டதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டுள்ளார்.
அம்னோ, பெர்சத்து மற்றும் பெஜுவாங் ஆகிய கட்சிகளை வழிநடத்திய மூத்த தலைவர்களுள் ஒருவரான மகாதீர் முகமட், இதற்கு மேலும் மலாய்க்காரர்கள் ஒன்றிணையாவிட்டால் மலேசியாவில் தங்களின் ஆதிக்கத்தை இழக்க நேரிடும் என்று தமது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தாம் இறங்கியதாகவும், ஆனால் அதனை தம்மால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, இது போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த மகாதீர், மிக சமீபமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம், முக்கிய எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பிற கட்சிகளை உள்ளடக்கிய, மலாய்க்காரர்களை மையமாகக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்பு முயற்சியை தொடங்கினார்.
என்றாலும், பெர்சாத்து தலைவர் முகிதீன் யாசின் மற்றும் அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீன் ஆகியோருக்கிடையிலான மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அதன் எதிர்காலம் கேள்விக்குறியானது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, மலாய் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய கெராகான் தானா ஆயர் கூட்டணியை அமைத்து, அதே ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மகாதீர் போட்டியிட்டார்.
ஆனால் 2022-ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், மஹாதீர் உட்பட ஜி.டி.ஏ வின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியுற்று தங்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.
அதன்பிறகு சிறிது காலத்திலேயே மகாதீர் பெஜுவாங்லிருந்து விலகினார்.
இந்நிலையில், கடந்த மாதம், மகாதீர் வெளியிட்ட கருத்து ஒன்றில், மலாயர்களின் ஒற்றுமையின்மைக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கும் அவர்களே பொறுப்பு என்று தெரிவித்தார்.
மலாய் கட்சிகளின் பெருக்கம் அச்சமூகத்தைப் பிளவுபடுத்தி, அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தியுள்ளதாகவும் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








